குழந்தை தத்தெடுப்பு
தேனிலவு மற்றும் படப்பிடிப்பு என இரண்டு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு வெளி நாடு சென்ற நட்சத்திரத் தம்பதியினர் மீண்டும் இந்தியா திரும்பி நடிகரது தந்தை வீட்டில் முதலிரவு நடந்தேறிய பின்னர் இருவரும் மீண்டும் திரைப் படங்களில் நடிக்கத் துவங்கினர்.
கதாநாயகன் ஒரு படத்தில் ஒரு கதாநாயகியுடனும் மறு படத்தில் வேறு ஒரு கதாநாயகியுடனும் நடிக்க வேண்டியிருந்தால் இருவரும் சேர்ந்து நடிக்கும் நாட்களை சரியாக முன்கூட்டியே தீர்மானித்து அந்த குறிப்பிட்ட நாட்களில் தான் படப்பிடிப்பு மேற்கொள்ள இயலும். ஒரு கதாநாயகன் ஐந்து திரைப்படங்களில் ஒரே கால கட்டத்தில் வெவ்வேறு கதாநாயகிகளுடன் நடித்துக் கொண்டிருந்தால் அந்த ஐந்து கதாநாயகிகள் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுக்காத நாட்களில் மட்டும் தான் இருவரும் சேர்ந்து நடிக்க முடியும். இதன் காரணமாக ஒரு திரைப்படம் வெளி வர நீண்ட நாட்கள் பிடிக்கும்.
அதே சமயம் ஒரு திரைப் படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து விட்டால் அவர்கள் இருவரும் சேர்ந்து திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படும் பட்சத்தில்; அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரைக்குள் படமாக்க திரைப்படக் கால்ஷீட்டுகளுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே நாளில் இருவரும் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்து விட்டு அதன் படி திரைப் படங்களில் நடித்தால் ஒரு திரைப்படம் மிக மிக குறுகிய காலத்திற்குள் வெளி வரும் வாய்ப்புகள் அதிகம்.
கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ அல்லது இருவருமோ படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நாட்களில் திரைப்படத்தில் வருகின்ற நகைச் சுவைக் காட்சிகளையோ அல்லது துணைக் கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டிய காட்சிகளையோ படமாக்க முடியும். கதாநாயகி இல்லாமல் கதாநாயகன் மட்டும் நடிக்கும் சண்டைக் காட்சிகளையும் கூட படமாக்க முடியும். அதே போல கதாநாயகன் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் காட்சிகளை கதாநாயகியை மட்டும் வைத்து படப்பிடிப்பு நடத்த முடியும்.
இருவரும் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றார்கள். இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்து விட்டனர். எனவே ஒரு தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் கால்ஷீட் கேட்டுவரும் சமயம் இருவரும் சேர்ந்து கால்ஷீட் கொடுத்து இருவரும் சேர்ந்து நடித்து இரண்டு வருட காலத்திற்குள் முப்பது திரைப்படங்கள் வெளி வந்தன. இரவு பகல் என்று பாராமல் கடினமாக உழைத்து இரண்டே வருடங்களில் முப்பது வெற்றிப் படங்களை அளிக்க முடிந்தது என்பது ஒரு உலக சாதனை.
அவ்வாறு நடித்துக் கொண்டிருக்கும் சமயம் இரண்டு படங்களில் கதாநாயகிக்கு குழந்தை மீது பாசம் அதிகம் இருப்பதாகவும் குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழ்வதாகவும் காட்சிகள் அமைய வேண்டும். அவ்வாறான காட்சிகளுக்காக அவர்களின் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வளர்ந்து வரும் குழந்தையான திருச்செல்வி தேர்வு செய்யப்பட்டாள்.
திரைப்பட இயக்குநர் குழந்தையிடம் கதாநாயகியைப் பார்த்து “அம்மா” என்று சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். பிஞ்சுக் குழந்தை தன் மழலை மொழியில் கதாநாயகியைப் பார்த்து அம்மா அம்மா என்று முதல் முறையாகச் சொல்லும் சமயத்தில் தமது சொந்தக் குழந்தையே தம்மை அம்மா அம்மா என்று அழைப்பதாகக் கருதி குழந்தையை உணர்ச்சி பொங்க கட்டித் தழுவி திரைப்படப் பிடிப்பு என்பதனை மறந்து முத்தமிட்டாள். இன்னும் சொல்லப் போனால் அந்த பிஞ்சுக் குழந்தை தம்முடையது என்னும் எல்லைக்கே போய் விட்டாள்.
திரைப் படப் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தை தன்னையும் அறியாமல் கதாநாயகியைப் பார்த்து அம்மா அம்மா என்று அழைத்த குரல் கேட்ட கதாநாயகிக்கு மிக்க சந்தோஷம். கதாநாயகிக்கு வந்த சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தட்டுத் தடுமாறி நின்றாள்.
இந்தக் காட்சியைக் கண்ட குழந்தையினைப் பெற்றெடுத்த தாய் குழந்தையை அவர்களிடத்தில் எடுத்துக் கொடுத்து குழந்தை உங்களை அம்மா அம்மா என்று அழைக்கின்றது என்பதற்காக நான் எதுவும் கவலைப்பட மாட்டேன். நீங்கள் என்னுடைய குழந்தை எப்படி அழைத்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த சமயம் திடீரென கீழே விழுந்து மயக்கமடைந்தாள்.
உடனே குழந்தையின் தாயினை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்து உடல் நலம் தேறியவுடன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். மருத்துவ மனையில் நோயாளிகள் பிரிவில் குழந்தைகளை அனுமதித்தால் குழந்தைக்கு தொற்று நோய் வந்து விடும் எனக் கூறி குழந்தையை வீட்டிலேயே வைத்துக் கொள்ளும் படி கூறிய படியால் குழந்தையைப் பெற்ற தாய் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதிலிருந்து வீடு திரும்பும் வரை குழந்தை திருச்செல்வி கதாநாயகியின் அறையிலேயே அருகில் இருந்தாள்.
கதாநாயகிக்கும் குழந்தைக்கும் இடையே மிக மிக நெருக்கமான பந்த பாசம் ஏற்பட்டு விட்டது. குழந்தையின் தாய் மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய பின்னர் குழந்தை நடிகையிடமே இருக்க விருப்பப் பட்டது. குழந்தையின் தாயும் உடல் அசதியின் காரணமாக குழந்தையை அருகில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் குழந்தையை கதாநாயகி நடிகையிடமிருந்து பிரிக்கவும் விரும்பவில்லை காரணம் தமது நோய் குழந்தைக்கு வந்து விடக் கூடாது என்னும் பயம்.
இந்த கால கட்டத்தில் நட்சத்திரத் தம்பதியினர் இருவரும் படப்பிடிப்புக்குச் செல்லும் சமயம் குழந்தையையும் கூட அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர். குழந்தை ஒரு பக்கம் யாருடனாவது விளையாடிக் கொண்டிருக்கும் சமயம் அவர்கள் இருவரும் படப்பிடிப்பில் சுறு சுறுப்பாக இருப்பார்கள்.
அவ்வாறு இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொண்டிருக்கும் சமயம் திடீரென கதாநாயகி நடிகை மயங்கி கீழே விழுந்து விட்டாள். படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும் சமயம் அந்தச் பிஞ்சுக் குழந்தை கதாநாயகியைப் பார்த்து அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டே கதறி அழுவதைப் பார்த்த யாராலும் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை.
மருத்துவ மனையில் நடிகையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கதாநாயகி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்துள்ளதாகவும் திடீரென கருச்சிதைவு ஏற்பட்ட காரணத்தால் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து விட்டாள் என்றும் தெரிவித்தனர். மருத்துவர்கள் கதாநாயகனிடம் ஆலோசனை வழங்கினர். கதாநாயகி கருவுற்ற நிலையில் திரைப்படத்தில் நடித்து வந்த சமயம் கருச்சிதைவு ஏற்பட்ட காரணத்தால் தான் மயக்கமடைந்தாள் எனவும் இனி வருங்காலங்களில் இதனைத் தவிர்க்குமாறும் ஆலோசனை வழங்கினார்கள்.
கதாநாயகன் கதாநாயகியைப் பார்த்து நீ கருவுற்ற விவரம் என்னிடம் முன் கூட்டியே சொல்லியிருந்தால் நான் முன்னேற்பாடாக திரைப் படங்களில் நீ நடிக்க வேண்டாம் என்று சொல்லி இருப்பேன் அல்லவா எனக் கேட்ட சமயம் கதாநாயகி தமது உண்மை நிலவரத்தை டாக்டர் முன்னிலையில் தெரிவிக்க ஆரம்பித்தாள். கதாநாயகி டாக்டரிடம் தமக்கு நீண்ட காலமாக அதாவது பூப்பெய்த நாள் முதல் மாதவிடாய் வருவதில் மிகுந்த கால தாமதம் காணப் பட்டதாகவும் மருத்துவர்களிடத்தில் காட்டிய சமயம் PCOD என்று சொல்லி அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டதாகவும் தற்போதும் அதே போல காலதாமத மாதவிடாய் என்று நினைத்து விட்ட காரணத்தால் கருவுற்றது தெரியவில்லை என்றும் தெரிவித்தாள்.
கதாநாயகன் பிறந்த அன்றே தாயைப் பறிகொடுத்து விட்டதாலும் உடன் பிறந்த சகோதரிகள் மற்றும் பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லாத காரணத்தாலும் பிற பெண்களுடன் சகஜமாக பழகாததாலும் பெண்களுக்கு ஏற்படுகின்ற இயற்கை உபாதைகள் பற்றி கொஞ்சம் கூட தெரியவில்லை. கதாநாயகியும் தம் கணவரிடத்தில் இது பற்றி இது வரையில் வாய் திறந்து சொல்லவில்லை.
இந்த காரணத்தால் கதாநாயகி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சுமார் பதினைந்து நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டாள்.
குழந்தை நட்சத்திரம் திருச்செல்வியின் தாய்க்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவ மனைக்கு கொண்டு போய் காண்பித்தார்கள். அப்போது திருச்செல்வியின் தாய்க்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டதோடு மட்டுமல்லாமல் மூச்சுத் திணரலும் அதிகமாக இருப்பதாக தெரிய வந்தது. இந்த இரண்டு நோய்களைத் தவிர சர்க்கரை நோய் கூட இருந்து வந்துள்ளது.
தொடர்ந்து பதினைந்து நாட்கள் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் நடைப்பிணம் போல இல்லம் திரும்பிய சமயம் குழந்தையை பார்த்த தாயின் முகம் மிகவும் வாடி விட்டது. மருத்துவ மனையில் இருந்த சமயம் உடல் மிகவும் மெலிந்து விட்டது. தலை முடிகள் அனைத்தும் கொட்டி விட்டன. உடலின் நிறம் ஒரு மாதிரியாக மாறி விட்டது. பெற்ற தாயினால் தமது மழலைக் குழந்தையுடன் கொஞ்சி விளையாடக் கூட முடியாத அளவிற்கு உடலில் பலம் குறைந்து விட்டது.
இந்த நிலையில் ஒரு விடுமுறை நாளன்று நட்சத்திர தம்பதியர் இருவரும் குழந்தை திருச்செல்வியுடன் குழந்தையின் தாயிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென குழந்தையின் தாய் இருவரையும் பார்த்து எனக்கு புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் இரண்டும் தவிர மூச்சுத் திணரலும் இருந்து கொண்டே இருக்கின்றது. இது போதாது என்று இரண்டு மூன்று நாட்களாக எனது இதயத்தில் லேசாக வலி தென் படுகின்றது.
நான் நித்திய கண்டம் பூர்ண ஆயிசு என்று இன்றைக்கோ நாளைக்கோ என்று காலம் கடத்திக் கொண்டிருக்கின்றேன். இந்த நிலையில் என் உயிருக்கு ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் என் செல்லக் குழந்தையை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். இந்த குழந்தைக்கு என்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. எனவே என்னுடைய இறுதி மூச்சு என் உடலை விட்டு பிரியுமுன்னர் இந்தக் குழந்தையை உங்களுக்கு சட்ட பூர்வமாக தத்துக் கொடுத்து விடுகின்றேன். நீங்களே என் குழந்தைக்கு பெற்றோராக இருந்து வளர்த்துப் பெரியவளாக்கி அவளது எதிர் கால ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அழுதவண்ணம் சொன்னது கேட்டு இருவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து அவர்களிடத்தில் இதற்கு உடன்பாடு இல்லையெனில் என்னுடைய குழந்தையை நான் உயிருடன் இருக்கும் போதே ஏதாவது ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுங்கள். என் குழந்தை அனாதையாக ஆஸ்ரமத்தில் வாழ்கின்றது என்னும் ஆத்ம திருப்தியுடன் நான் இறைவனடி சேர்கின்றேன் என்று அழுதவண்ணம் கேட்டுக் கொண்டாள். அச்சமயம் பிஞ்சுக் குழந்தை திருச்செல்வி கதாநாயகி நடிகையின் விரல்களைப் பிடித்தவண்ணம் மடியில் உறங்கி விட்டது. அதற்குப் பின்னர் நட்சத்திரத் தம்பதியர் இருவரும் தமது அறைக்கு குழந்தை திருச்செல்வியுடன் திரும்பினர்.
நட்சத்திரத் தம்பதியினர் இருவரும் இரவு முழுக்க தூங்காமல் குழந்தையைப் பற்றியே சிந்தித்த வண்ணம் பேசிக் கொண்டே இருந்தனர். அப்போது கதாநாயக கணவன் தம் மனைவியிடத்தில் உனக்கு PCOD என்னும் கோளாறு இருப்பதால் மறுபடியும் கர்ப்பம் தரிக்கும் சமயம் வழக்கம் போல் மாதவிலக்கு தாமதம் என்று அலட்சியமாக இருந்து விட்டால் பிறக்கப் போகும் குழந்தை எப்போது பிறக்கும் என்பதனை அறிவது மிகவும் கடினம். அதுவும் தவிர நான் பிறந்தவுடன் என்னுடைய தாயை இழந்த சோகம் எனக்கு இன்று வரையில் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்த நிலையில் குழந்தைப் பேறு என்னும் பாக்கியத்தில் உன்னை நான் இழக்க விரும்பவில்லை. எனவே எங்களை நம்பி இருக்கும் இந்த குழந்தையை அவளது தாயாரின் விருப்பப்படி தத்து எடுத்துக் கொள்வோம் என்று சொன்னது கேட்ட கதாநாயகியால் மறுப்பு எதுவும் தெரிவிக்க முடியவில்லை.
பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடிப்பவர்கள் தமக்குத் திருமணம் ஆகி விட்டால் ரசிகர்கள் தம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மார்கெட் சரிந்து விடும் என்று நினைத்து ரகசிய திருமணம் செய்து கொள்வார்கள். திருமணம் செய்து கொண்டாலும் அதனை மறைத்து வைத்திருப்பார்கள். ஆனால் இந்த நட்சத்திர தம்பதியர் ஊரறிய உலகறிய லட்சக் கணக்கானோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
அதே போல கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் தமக்குக் குழந்தை பிறந்தால் உடல் அழகு போய் விடும். கவர்ச்சி போய் விடும். கவர்ச்சி போய் விட்டால் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்து விடும் என அஞ்சி குழந்தைகள் பெறுவதை தள்ளிப் போடுவார்கள் அல்லது அவர்களது திரைப்பட நடிப்புத் தொழிலில் சரிவு ஏற்பட்ட பின்னர் குழந்தைகளை பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறான நடிகைகளுக்கு கால தாமதமாக குழந்தைகள் பிறப்பதால் குழந்தைகள் வளருமுன்பே நடிகைகளுக்கு முதுமை வந்து முதுமைக்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
ஆனால் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் நடிப்புத் தொழிலில் முன்னேற்றம் தான் இருந்துள்ளது தவிர சரிவு என்பதே இல்லை. ஆனால் குழந்தை பிறக்கும் சமயம் நடிகை தம்மை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்னும் ஒரே பயம் தான் நடிகருக்கு இருந்தது. ஏனெனில் கணவன் மனைவிக்கிடையே அவ்வளவு ஒற்றுமை மற்றும் நெருக்கம் மற்றும் புரிந்துணர்வு.
எனவே குழந்தை திருச்செல்வியை அவளது தாயாரின் விருப்பப்படி தத்தெடுத்துக் கொள்வது என தீர்மானித்து அதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை வழக்கறிஞர் மூலமாக ஏற்பாடு செய்து ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரித்தல் சட்டம் 1956-ன் கீழ் குழந்தை திருச்செல்வியினை அவளது பெற்ற தாயாரின் ஒப்புதலுடன் நட்சத்திரத் தம்பதியினர் சட்டத்திற்கு உட்பட்டு சட்டப்படி தத்து எடுத்துக் கொண்டனர்
தத்து எடுத்துக் கொண்டவுடன் முதல் வேலையாக குழந்தை திருச்செல்வியை ஒரு மிகப் பெரிய தனியார் பள்ளியில் மழலை வகுப்பில் சேர்த்தனர். இதனைக் கண்ணுற்ற குழந்தையின் பெற்ற தாய் மிகவும் சந்தோஷப் பட்டாள்.
No comments:
Post a Comment