முதலிரவு எதுவும் நடக்கவில்லை.
நட்சத்திரத் தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் தம்முடைய வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் எப்படி எல்லாம் இருந்தார்கள். எப்படி எல்லாம் கஷ்டப் பட்டார்கள் என்பதனை ஒருவர் சொல்ல மற்றொருவர் நன்றாகப் புரிந்து கொண்டனர்.
முதல் நாளன்று கணவன் மனைவி இருவரும் தனி அறையில் தனிமையில் சந்தித்த போதும் இரண்டாவது நாளன்று அதே போன்று சந்தித்த போதும் நடந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த காரணத்தால் ஒருவரைப் பற்றி மற்றொருவர் நன்றாகத் தெரிந்து கொண்டனர்.
வழக்கமாக சினிமாவில் நடிக்க வருகின்ற நடிகர்களையும் நடிகைகளையும் பார்க்கும் ரசிகர்கள் திரைப்படக் கலைஞர்கள் லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் இருக்கலாம் என்னும் எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் எப்படி இருந்தார்கள் இப்போது எப்படி இருக்கின்றார்கள் என்பதனை ஒருவருக்கொருவர் நன்றாக அறிமுகம் செய்து கொள்வதனால் தான் தெரிய வரும்.
அதே போல திருமணமானவர்கள் கன்னிப் பெண்களாகவும் திருமணமாகாதவர்கள் தாயாகவும் நடிப்பார்கள். அந்த விவரம் ரசிகர்களுக்குத் தெரியாது.
இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து கொண்டார்கள். இருவரும் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் என்பதனை நன்றாகப் புரிந்து கொண்டார்கள்.
வெளி நாடுகளில் படப்பிடிப்பு மற்றும் தேனிலவு என்று சொல்லி மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நட்சத்திரத் தம்பதியினர் பல நாட்கள் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியாக இருந்தனர்.
இப்படியே சில மாதங்கள் கடந்து விட்டன. முதலிரவு நடக்கவில்லை. வழக்கம் போல் இருவரும் திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு மிகவும் சந்தோஷமாக புறப்பட்டுச் சென்று வந்தனர்.
அவ்வாறாக படப்பிடிப்பு நடந்து வரும் சமயம் ஒரு நாள் கதாநாயகி குளத்தில் விழுவது போலவும் கதாநாயகன் குளத்தில் குதித்து கதாநாயகியை குளத்திலிருந்து தூக்கி வந்து மயங்கிக் கிடக்கும் கதாநாயகியை வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதி ஆகியவற்றை அமுக்கி கதாநாயகி வயிற்றில் உள்ள தண்ணீரை வெளியே எடுத்து கதாநாயகியை காப்பாற்றுவது போலவும் காட்சி.
இருவரும் மிகக் குறுகிய நேரத்தில் அந்தக் காட்சியில் நடித்து முடித்தனர். மேற்கொண்டு இன்னும் குறைந்த பட்சம் 4 மணி நேரமாவது படப்பிடிப்பு நடைபெற வேண்டும். ஆனால் திரைப்பட இயக்குநர் தம் குழுவினரிடம் பேக் ஆஃப் என்று உரத்த குரலில் சொன்னார்.
திரைப்படக் கதாநாயகிக்கு எதுவும் தெரியவில்லை. இன்னும் 4 மணி நேரம் படப்பிடிப்பினை நடித்தலாமே அதற்குள் ஏன் படப்பிடிப்பை முடிக்கின்றார்கள் என்று கேட்டார். அதற்கு கதாநாயகன் கதாநாயகியிடம் தண்ணீரில் விழுந்து காப்பாற்றிய காரணத்தால் உனக்கு ஓய்வு தேவைப்படலாம் என்று நினைத்து படப்பிடிப்பினை பாதியிலேயே முடித்திருப்பார்கள் என்று சொல்லி சமாதானப்படுத்தினார்.
அதன் பின்னர் இருவரும் சற்று நேரம் கடைதெருவிற்குச் சென்று விட்டு சொகுசு விடுதிக்குத் திரும்பினார்கள். சொகுசு விடுதியில் அவர்கள் தங்கியிருந்த அறையின் முகப்புக் கதவில் ஒரு வாசகம் ஒட்டப் பட்டிருந்தது. திரைப்படக் கலைஞர்கள் அல்லவா?. அசத்தி விட்டார்கள்.
அதற்குப் பின்னர் புதுமணத் தம்பதியர் இருவரும் தமது அறைக்குள் நுழைந்தார்கள். அங்கு திரைப்பட படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் இருந்தார்கள். வித்தியாசமான வாசகங்களுடன ஒரு கேக். அந்த வாசகம் இருவரையும் மிகவும் கவர்ந்து விட்டது.
அப்போது திரைப்பட தயாரிப்பாளர் இயக்குநர் தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் துணை நடிக நடிகையர் என அனைவரும் சேர்ந்து நட்சத்திரத் தம்பதியர் இருவரையும் ஆசீர்வதித்து வாழ்த்தி விட்டு கேக் கட் செய்து முடித்தவுடன் அனைவரும் அவரவர் இருப்பிடத்திற்கு திரும்பினர்.
அதன் பின்னர் மனைவி கணவனைப் பார்த்து என்னங்க இதெல்லாம் என்று கேட்டார். அதற்கு கணவன் புரோகிதர் சாந்தி முகூர்த்தத்திற்கு குறித்துக் கொடுத்த நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கின்றது. அதனால் தான் இந்த ஏற்பாடெல்லாம் என்று சொன்னார். உடனே மனைவி கணவனைப் பார்த்து இந்த விவரம் ஏன் என்னிடத்தில் முன் கூட்டியே தெரிவிக்க வில்லை என்று கேட்டதற்கு ஆச்சர்யப் படுத்தத் தான் என்று கணவன் கூறினார்.
உடனே மனைவி கணவரிடத்தில் நான் சொல்வதை இன்று மட்டும் தயவு செய்து கேளுங்கள் இந்த நேரத்தில் முதலிரவு வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு கணவன் இயற்கை உபாதைகள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்க அதெல்லாம் இல்லை நான் முதலிரவுக்கு தயாரான நிலையில் எந்தவித இடையூறும் இல்லாமல் நன்றாகத் தான் இருக்கின்றேன். உடல் நிலையிலோ அல்லது மன நிலையிலோ எந்த விதமான பாதிப்பும் இல்லை. இருந்தாலும் நான் சொல்வதை தயவு செய்து இன்று மாத்திரம் கேளுங்கள் என்று சொல்ல கணவன் மனைவியடம் சரியெனச் சொல்ல மனைவி ஆரம்பித்தாள்.
சூரியன் பூமிக்கு அப்பால் வெகு தூரத்தில் இருக்கின்றது. சூரியனது ஒளிக் கதிர்கள் பூமியை வந்தடைய சுமார் ஒன்பது நிமிடங்கள் ஆகின்றது. நடுவில் உள்ள ஓசோன் படலம் சூரிய மண்டலதிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களை கிரகித்துக் கொண்டு வெளிச்சத்தை மாத்திரம் நமக்குக் கொடுக்கின்றது.
ஜோதிடர்கள் ஒருவரது ஜாதகத்தை கணிக்கும் சமயம் யாருக்கு ஜாதகம் கணிக்கின்றார்களோ அவர் எந்த இடத்தில் பிறந்தாரோ அந்த இடத்தை வைத்துக் தான் ஜாதகம் கணிப்பார்கள். ஏனெனில் ஒவ்வொரு இடத்திற்கும் சூரிய உதய நேரமும் சூரிய அஸ்தமன நேரமும் மாறுபடும். எனவே சூரிய உதய நேரத்தை மனதில் கொண்டு அந்த நேரத்தை வைத்துக் கொண்டு தான் ஜாதகத்தை கணிப்பார்கள். அவ்வாறு கணித்தால் தான் அது உண்மையான ஜாதகமாக இருக்கும். அவ்வாறான ஜாதகத்தினை ஆராய்ந்து சொல்லப்படுகின்ற ஜோதிடம் பிற்காலத்தில் உண்மையாக இருக்கும். ஜோதிடர் சொல்லும் ஜாதகப் பலன் பொருத்தமாக இருக்கும்.
அதே போல நல்ல நேரம் என்பது ஆங்கிலத்தில் Geographic Location அதாவது புமியில் அந்த இடம் அமைந்துள்ள பகுதி எந்த அட்ச ரேகையில் எந்த தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது என்பதனை வைத்தே நல்ல நேரம் குறிப்பார்கள். இந்தியாவில் சூரிய உதயம் ஆகுமுன்னரே ஜப்பானில் சூரிய உதயம் ஆகி விடும். அதே போல இந்தியாவில் 12 மணி நேரம் பகலும் 12 மணி நேரம் இரவும் மாறி மாறி இருக்கும்.
ஆனால் சில நாடுகளில் உதாரணமாக நார்வே, ஐஸ்லாந்து, கனடா, அலாஸ்கா. சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளில் பகல் பொழுது அதிகமாகவும் இரவுப் பொழுது மிக மிக குறைவாகவும் இருக்கும். ஒரு சில மாதங்களில் சூரிய அஸ்தமனமே இல்லாமல் எப்போதும் பகல் பொழுதாகவே இருக்கும் அவ்வாறான நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு நமது இந்திய கலாச்சாரம் மற்றும் ஜாதகம் கணிக்கும் முறைகள் பொருந்தாது.
இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் மட்டுமே பகல் பொழுது குறைவாகவும் இரவுப் பொழுது அதிகமாகவும் இருக்கும். நிறைய வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு சில நிமிடங்கள் தான்.
இந்தியாவில் புதிதாக மணமுடித்துக் கொண்ட தம்பதியர் முதலிரவினை இரவில் கொண்டாடுவதற்கான காரணம் இரவில் வெயிலில் கொடுமை இருக்காது குளிர்ச்சியாக இருக்கும். அவ்வாறான குளிர்ச்சியான நேரத்தில் தான் முதலிரவு மிகவும் சந்தோஷமானதாக அமையும்.
அத்துடன் மணமகளுக்கு மல்லிகை மலர்கள் சூட்டி கையில் பால் கொடுத்து முதலிரவுக்கு தோழியர் அனுப்பி வைப்பார்கள். அதே நேரத்தில் முதலிரவு நடக்கும் அறைக்குள் இனிப்பு பண்டங்கள் நிறைய வைத்திருப்பார்கள். ஏனெனில் முதலாவது இல்லறத்தினை மல்லிகை மணத்துடன் வாயில் இனிப்புடன் ஆரம்பிக்க வேண்டும். நடுவில் தாகம் ஏற்பட்டால் தண்ணீருக்குப் பதிலாக சத்தான பசுவின் பால் அருந்த வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் இவ்வாறு ஏற்பாடு செய்வார்கள்.
இன்னும் சில வீடுகளில் பரம்பரைக் கட்டில் என்று ஒன்று இருக்கும் அந்த கட்டிலை புதிதாக மணமுடித்துக் கொண்டு வரும் அந்த வீட்டின் புது மணத் தம்பதியருக்கு முதலிரவுக்கு மட்டும் உபயோகப் படுத்தி விட்டு மீண்டும் பத்திரமாக எடுத்து வைத்து விடுவார்கள். காரணம் அடுத்த புது மணமகள் வரும் போதும் பரம்பரைக் கட்டிலைத் தான் முதலில் உபயோகப் படுத்த வேண்டும் என்பது.
நானும் சரி நீங்களும் சரி ஆடம்பரத்துடன் கூடிய சொகுசான வாழ்க்கையில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல. பணம் அந்தஸ்து இன்று வரும் நாளை போகும். இருந்தாலும் ஒரு தனி மனிதன் ஆரம்ப காலத்தில் எப்படி வாழ்ந்தானோ அதனை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்துப் பார்த்தால் தான் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் கருணை உள்ளம் வரும்.
நேற்றுப் பெய்த மழையில் இன்று பூத்த காளானாக மாறி நாளை மறுபடியும் வெயில் வரும் சமயம் சுருண்டு போய் விடக் கூடாது என்பதில் நான் திடமாக இருக்கின்றேன். எனவே நான் சொல்வதை நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டும்.
என்னுடைய மாமனார் அதாவது உங்களது தந்தை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உங்களை வளர்த்து பெரிய ஆளாக்கினாரோ அந்த இல்லம் தான் என்னுடைய கோயில். அதே போல என்னுடைய மாமனார் சவ்வு மிட்டாய் விற்பதற்கு எந்த மூங்கிலையும் பொம்மையையும் பயன்படுத்தி பாட்டுப் பாடி விற்று உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கினாரே அந்த கை தட்டும் பொம்மையும் மூங்கிலும் தான் என்னைப் பொருத்த வரையில் குல தெய்வம். இதனைத் தான் நம் முன்னோர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லி வணங்கினார்கள்.
இன்னும் ஒருபடி மேலாக என்னை வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோர் திரைப்படக் கலைஞர்களுக்கு உணவு பரிமாறி என்னை வளர்த்த காரணத்தால் அது போன்ற தொழிலில் ஈடு பட்டுள்ளவர்கள் என் பெற்றோருக்கு ஈடானவர்கள். எனவே திரைப்படத்தில் நடிக்கும் சமயம் எனக்கு உணவு பரிமாறுகின்றவர்களை அம்மா என்றும் அப்பா என்றும் அழைக்கின்றேன்.
என் தந்தை இறக்கும் சமயம் நான் அருகில் இல்லை. என் தாய் என் அருகில் படுத்திருக்கும் சமயம் இறந்தது எனக்கு விடிந்த பின்னர் தான் தெரியும். அவர்களில் யாராவது நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தால் கூட அவர்களுக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கும் எனக்கு அந்த பாக்கியம் கூட கிடைக்கவில்லை.
இந்த வெளி நாட்டில் பட்டப் பகலாக இருக்கும் இந்த நேரம் இந்தியாவில் இரவுப் பொழுது என்று புரோகிதர் சாந்தி முகூர்த்தத்துக்கான நல்ல நேரம் குறித்துக் கொடுத்துள்ளார். அதனைப் பின் பற்றலாம் என்பதனை ஒரு பக்கம் வைத்து விட்டு புரோகிதர் குறித்துக் கொடுத்துள்ள அடுத்த சாந்தி முகூர்த்த நாளைக்கு உங்களது பழைய வீட்டினை யாரேனும் ஒருவர் மூலம் சுத்தம் செய்யச் செய்து நாம் இருவரும் அங்கு சென்று முதலிரவை வைத்துக் கொள்ளலாம்.
அந்த வீட்டில் தற்போது இருக்கும் வசதிகள் மட்டும் போதும் புதிதாக கட்டில் மெத்தை எதுவும் வாங்கக் கூடாது. கோரப் பாயும் தலையணையும் மாத்திரம் இருந்தால் போதும்.
உங்களுக்கு உங்கள் தந்தை வாழ்ந்த, உங்கள் தந்தை உங்களை வளர்த்து ஆளாக்கிய வீடு சொந்தமாக இருக்கின்றது. ஆனால் எனக்கு என்னுடைய உறவினர்கள் சொன்னது போல என் பெற்றோர் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த காரணத்தால் எனக்குத் தாய் வீடு என்று சொல்லிக் கொள்ள இந்தப் பூவுலகில் எந்த இடமும் இல்லாமல் போய் விட்டது. இன்றைய நாளில் நான் லட்சாதிபதியாக அல்லது கோடீஸ்வரியாக இருந்து என்ன பயன்? தாய் வீடு என்று சொல்லிக் கொள்ள எனக்கு இந்த பூமியில் எங்கும் இடமில்லை என்பது நிதர்சனமான உண்மை.
உங்கள் தந்தை வாழ்ந்த வீட்டில் சாந்தி முகூர்த்தம் வைத்துக் கொண்டால் தான் தெருத் தெருவாக பாட்டுப் பாடி சவ்வு மிட்டாய் விற்று உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடையும். அதே போல சினிமா கலைஞர்களுக்கு உணவு பரிமாறும் தம்பதியர் அவர்கள் கரங்களால் என்னை அலங்கரித்து என்னிடம் பால் செம்பு கொடுத்து என்னை உங்களிடத்தில் முதலிரவுக்கு அனுப்பி வைத்தால் என் பெற்றோர்களின்; ஆன்மா சாந்தியடையும்.
எனவே வெளி நாடுகளில் பட்டப் பகலில் முதலிரவு கொண்டாடுவதற்குப் பதிலாக இந்தியாவில் அதுவும் நீங்கள் பிறந்து வளர்ந்த வீட்டில் உங்கள் தந்தை உங்களை இந்த அளவிற்கு ஆளாக்க உதவியாக இருந்த அந்த பொம்மையினை வணங்கிய பின்னர் நாம் இருவரும் சந்தோஷமாக முதலிரவு கொண்டாடலாம் என்றும் அந்த வீட்டில் வசதிகள் எவ்வளவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் தந்தையின் நல்லாசி வேண்டும் என்றும் சொல்லி முடித்தார்.
இதனைக் கேட்ட கதாநாயகனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கிட தன் மனைவியை மீண்டும் ஒருமுறை கட்டியணைத்து நீ சொன்னவாறே முதலிரவினை இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று ஒப்புக் கொண்டார்.
புரோகிதர் குறித்துக் கொடுத்த நல்ல நாளிலும் நல்ல வேளையிலும் கூட முதலிரவு நடக்கவில்லை. ஆனால் இருவருக்கும் எந்த விதமான வருத்தமோ அல்லது ஏக்கமோ இல்லை.
No comments:
Post a Comment