மனைவி அறிமுகம்.
கணவன் மனைவியிடம் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்ட பின்னர் இருவரும் உறங்கலாயினர்.மறு நாள் அதிகாலையில் கணவன் எழுவதற்கு முன்பே மனைவி எழுந்து குளித்து விட்டு சொகுசு விடுதியின் சமையலறைக்கு போன் செய்து காபி வரவழைத்து அவளது கணவரை படுக்கையிலிருந்து துயிலெழுப்பி கொடுக்கும் சமயம் கணவன் மனைவியைப் பார்த்த பார்வை மிகவும் நெருடலாக இருந்தது.
அவர் தந்தைக்குப் பின்னர் அந்த இடத்திற்கு அவரது மனைவி வந்திருப்பதாக உணர்ந்தார். ஏனெனில் அவருக்கு தாயைப் பற்றியோ தாயன்பைப் பற்றியோ முற்றிலும் தெரியாது. அதன் பின்னர் தினசரி பத்திரிக்கைகளை படித்து முடித்த பின்னர் கணவன் குளித்து விட்டு வந்து அமர்ந்தார். அப்போது மனைவி அவருக்கு உண்பதற்கு என்ன வேண்டும் என்று கேட்டறிந்து சமையறைக்கு போன் செய்து வரவழைத்துப் பரிமாறினாள்.
விடுதி பணியாளர்கள் நட்சத்திரத் தம்பதியர் இருவருக்கும் பரிமாறுவதற்கு தயாராக இருந்த போதிலும் தம் கணவருக்கு தாமே பரிமாற வேண்டும் என்னும் கடமையிலிருந்து தவறவில்லை. இருவரும் காலை உணவு முடித்த பின்னர் படப்பிடிப்பிற்குச் செல்ல தயாராயினர்.
வழக்கம் போல் இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அங்கு எல்லோருடனும் கல கலப்பாக உறையாடி விட்டு படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ள கடைத் தெருவிற்குச் சென்று சுற்றிப் பார்த்து விட்டு இருவருக்கும் பிடித்தமான அல்லது அழகாகத் தெரிந்த ஹோட்டலில் இரவு சாப்பாட்டினை முடித்து விட்டு விடுதிக்குத் திரும்பினர்.
கணவனும் மனைவியும் ஒரே கட்டிலில் அருகருகே அமர்ந்து கொண்டார்கள். முதல் நாள் இருந்த வெட்கம் மற்றும் விலகல் குறைந்து நெருக்கம் சற்று அதிகமாக இருந்தது.
கணவன் மனiவியிடம் நான் என்னைப் பற்றி நேற்று சொன்ன பின்னர் என்ன நினைக்கின்றாய் எனக் கேட்டார். அதற்கு மனைவி என்னைப் போல் நீங்களும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி இருக்கின்றீர்கள் என்பதனை நன்றாக அறிந்து கொண்டேன். இன்று என்னைப் பற்றி நான் சொல்லலாமா எனக் கேட்டவுடன் கணவர் சரியென்று சொல்ல மனைவி அவளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். எனது தந்தையும் தாயாரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் இரண்டு வீட்டாரும் என்னுடைய தாயாரையும் தந்தையையும் ஒதுக்கி வைத்து விட்டார்கள். உற்றார் உறவினர்களின் உறவுகள் இல்லாவிட்டாலும் இருவருடைய வாழ்க்கையும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியதின் காரணமாக நான் மிகவும் அழகாகப் பிறந்து விட்டேன்.
என் தந்தை மிகவும் சுறு சுறுப்பானவர். என் தாய் மிகவும் அழகானவள். அவர்களுக்கு மகளாகப் பிறந்ததால் என்னுடைய தாயின் அழகும் என்னுடைய தந்தையின் சுறு சுறுப்பும் என்னிடத்தில் ஒரு சேரக் குடிகொண்டு விட்டது. அதே நேரத்தில் என் பெற்றோரது உறவினர்கள் மிகப் பெரிய அந்தஸ்தில் இருந்த போதிலும் யாரும் என் பெற்றோரை மதிப்பதில்லை. உறவு கொண்டாடுவதில்லை.
எனவே நான் படித்து பட்டம் பெற்று நிறைய சம்பாதித்து என் பெற்றோரை அவரது உறவினர்களுக்கு இணையாக முன்னேற்ற வேண்டும் என்னும் ஒரே காரணத்தால் நன்றாகப் படித்து பட்டப் படிப்பை முடித்தேன். ஆனால் அவர்கள் இருவரும் ஏழையாக இருந்த ஒரே காரணத்தால் நானும் ஏழையாக இருப்பது போல உணர்கின்றேன்.
எனக்கு திரைப்படத்தில் நடிக்கும் ஆசை எதுவும் கிடையாது. ஆனால் என்னுடைய பெற்றோர் சினிமாவினால் தான் வாழ்க்கை நடத்தினார்கள். எப்படியெனில் சினிமா ஸ்டுடியோவில் உள்ள சமையலறையில் சமையல் செய்து சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறி அவர்களும் அதன் மூலம் தமது பசியினை தீர்த்துக் கொண்டனர். என்னுடைய தந்தை என்னிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை சினிமா கலைஞர்களுக்கு நான் உணவு பரிமாறுகின்றேன். எனவே சினிமா எனக்கு சோறு போடுகின்றது என்பது தான். படப்பிடிப்பு பலப்பல ஊர்களில் பலப்பல நாட்கள் நடைபெறும் என்னும் காரணத்தால் என்னை விடுதியில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்தார்கள்.
படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் போது நான் என்னுடைய பெற்றோருடன் படப்பிடிப்பு ஸ்டுடியோவில் இருப்பேன். என்னுடைய தாயார் என்னை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அனுப்பவே மாட்டார்கள். சமையலில் மாத்திரம் நான் உதவியாக இருப்பேன். உணவு பரிமாறக்கூட என்னை அனுமதிக்க மாட்டார்கள்.
ஏனெனில் யாரும் எந்த கால கட்டத்திலும் என்னை வேலை வாங்குவதை அவர்கள் விரும்பவில்லை. நான் சென்னையிலேயே இளங்கலை பட்டப் படிப்பை முடித்தேன். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதே போலவே என்னுடைய தந்தையும் தாயும் ஆசைப்பட்டார்.
என்னுடைய தந்தையின் எந்த ஆசைகளும் நிறைவேறவில்லை. அவர் ஆசைப்பட்டது என்னை அவரது தங்கையின் மகனுக்கோ அதாவது அத்தை மகனுக்கோ அல்லது என் தாயாரின் அண்ணன் அல்லது தம்பி மகனுக்கோ அதாவது எனது மாமாவின் மகனுக்கோ திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது.
ஆனால் ஒண்டுவதற்கு இடம் இல்லாமல் கண்ட கண்ட இடங்களில் சமையல் செய்து வாழ்க்கை நடத்தி வரும் என் பெற்றோரை நாடோடிகள் என்று ஏளனப் படுத்தினார்கள். யாரும் என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை. நான் அழகாக இருந்தும் நன்றாகப் படித்திருந்தும் நமது வருமை என் தந்தைக்கு கவலையைத் தந்தது.
வெளியூருக்கு என்னுடைய தந்தையும் தாயாரும் படப்பிடிப்பு குழுவினருக்கு சமையல் செய்து பரிமாறுவதற்கு சென்றிருந்த சமயம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு உணவு பரிமாறும் நேரத்தில் திடீரென மாரடைப்பு வந்து அந்த இடத்திலேயே அகால மரணமடைந்தார். படப்பிடிப்பு குழுவில் இருக்கும் அவசர உதவி டாக்டர் ஒருவர் என் தந்தையை பரிசோதித்து திடீரென மாரடைப்பு வந்து இறந்து விட்ட காரணத்தால் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றாலும் உயிர் பிழைக்க வைக்க முடியாது என்று தெரிவித்தார்.
எனவே இயக்குநரும் தயாரிப்பாளரும் சாப்பிடுவதை பாதியிலேயே நிறுத்தி விட்டு என் தந்தையின் இறுதி சடங்கினை நிறைவேற்ற ஏற்பாடு செய்தனர். வேறு யாராவது இறந்து இருந்தால் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால் சமையல்காரர் தானே என்பதால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. படப்பிடிப்பு பாதிக்கப்படவில்லை என்னும் காரணத்தால் தெரிவில்லை. தெரியப் படுத்தவும் இல்லை..
என் பெற்றோருக்கு என்னைத் தவிர வேறு உறவினர்கள் யாரும் இல்லாத ஒரே காரணத்தால் அந்த ஊரிலிருந்து என் தந்தையின் உடலை இங்கு கொண்டு வருவதற்கு பதிலாக என்னை அந்த ஊருக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்று இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் நானும் என் தாயாரும் திரும்ப வந்து சேர்ந்தோம்.
என்னுடைய தந்தையும் தாயாரும் மிகவும் நெருக்கமாக அன்புடன் இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள். அவரது மறைவு என்னுடைய தாயாருக்கு தொழிலில் பாதிப்பை கொடுத்தது. தொடர்ந்து படப்பிடிப்பு குழுவினருக்கு சமையல் செய்யும் பொறுப்பு என் தாயாரால் தனிமையில் செய்ய முடியாது என்பதன் காரணமாக என் தாயாரிடமிருந்து பிறருக்கு சமையல் பொறுப்பு கை மாறியது. எனது தாயாரின் வருமானம் குறைந்து விட்டது.
அந்த நேரத்தில் என்னுடைய தாயார் அழகாக இருந்த காரணத்தால் ஏதேனும் துணை வேடங்களில் தாயாராவோ அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரங்களிலோ நடிக்க இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் கேட்டுக் கொண்டார்கள்.
என்னுடைய தந்தை உயிருடன் இருந்த சமயத்திலேயே என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுத்த என் உறவினர்கள் என் தாயார் சினிமாவில் நடித்தால் என்னை மணமுடித்து வைப்பது கஷ்டமாகி விடும் என்று பயந்து என் தாயார் சினிமாவில் நடிக்க மறுத்து விட்டார்கள்.
ஆனால் ஒரு துரதிருஷ்டம் என்னுடைய தந்தை தனிஷ்டா பஞ்சமி என்னும் நட்சத்திரத்தில் அதாவது அடைப்பு என்று சொல்லப் படுகின்ற வேளையில் இறந்ததாலும் என்னுடைய தாயார் அவர் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்து இருந்த காரணத்தாலும் என் தந்தை இறந்த 30-வது நாளில் என் ;தாயார் திடீரென இரவுத் தூக்கத்தில் அகால மரணமடைந்தார். நான் அருகில் படுத்திருந்தும் எனக்கு எதுவும் தெரியவில்லை. நான் தனி மரமானேன். எனக்கென்று உறவினர்கள் யாரும் இல்லை.
ஒருவர் தனிஷ்டா பஞ்சிமியில் இறந்தால் எந்த இடத்தில் வாழ்ந்தாரோ அந்த இடத்தில் அடைப்பு காலம் முடியும் வரை சில சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் என்பது எனக்கோ என் தாய்க்கோ அப்போது தெரியாது.
அதே சமயம் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம் என் தந்தை இறந்த காரணத்தால் அந்த இடம் என் பெற்றோர் வாழ்ந்த இடம் அல்ல என்பதனால் ஊருக்கு திரும்பி விட்டோம் என்பது தான் உண்மை. ஒரு வேளை ஒரு வீட்டில் என் குடும்பத்தார் தங்கியிருந்து என் தந்தை இறந்திருந்தால் அவ்வாறான சம்பிரதாயங்களைச் செய்து என் தாயை நான் காப்பாற்றியிருக்க முடியும் என்பதனை நான் தற்போது உணர்கின்றேன். என்னுடைய தந்தை இறந்த பின்னர் என் தாயும் இறந்தது கண்டு நான் யாரும் இல்லாமல் அநாதையாக இருப்பதை உணர்ந்தவர்கள் பலர்.
என் தந்தை இறந்த சமயம் திரைப்படத்தினை இயக்கியவரும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் எனக்கு உதவி செய்ய முன் வந்தனர். உடனே நான் அவர்களிடத்தில் எனக்கு ஏதேனும் வேலை வாங்கித் தாருங்கள் அல்லது வேலையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடினேன். என்னுடைய வேதனையைக் கண்ட இயக்குநர் அவரது அடுத்த படத்தில் என்னை கதாநாயகியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். நானும் என்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக சரியென ஒப்புக் கொண்டேன்.
என்னுடைய தந்தையும் தாயாரும் என்னைத் திருமணம் செய்து வைக்க முறைப் பையன்களிடம் கெஞ்சி மன்றாடிய சமயம் வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் நான் சினிமாவில் நடிக்கின்றேன் என்று அறிந்ததும் எனக்கு கிடைக்க இருக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ள முன் வந்தனர். பெற்றோர் இருக்கும் போது என்னை வேண்டாம் என்று ஒதுக்கியவர்களை பெற்றோர் இறந்த பின்னர் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
அத்தை மகனை திருமணம் செய்து கொண்டால் மாமன் மகன் சண்டைக்கு வருவான். மாமன் மகனைத் திருமணம் செய்து கொண்டால் அத்தை மகன் சண்டைக்கு வருவான். என்னால் எதுவும் சமாளிக்க முடியாது என்ற காரணத்தால் நான் ஒரே முடிவாக என் பெற்றோர் உயிருடன் இருக்கும் சமயம் அவர்களின் பூரண சம்மதத்துடன் ஏற்படாத திருமண பந்தம் என்னும் உறவு இனிமேல் அவர்களுடன் வேண்டாம் என்று புறக்கணித்து விட்டேன்.
முதல் படத்தில் நடிக்கும் போது கதாநாயகி என்னும் காரணத்தால் எனக்குக் கிடைத்த மரியாதையும் கௌரவமும் அதனால் கிடைத்த பணமும் புகழும் என்னை திரைப்படத்திலேயே தொடர்ந்து நடிக்க வேண்டும் என்னும் உத்வேகத்தைக் கொடுத்தது. நான் செய்த அதிர்ஷ்டம் என்னுடைய முதலாவது படம் முழுக்க முழுக்க சென்னையிலேயே படமாக்கப் பட்டது. எனவே நான் மதிய உணவினை மட்டும் படப்பிடிப்பு தளத்தில் சாப்பிட்டு விட்டு காலையிலும் மாலையிலும் ஹாஸ்டல் உணவினை எடுத்துக் கொண்டேன்.
காலையில் ஸ்டுடியோவிலிருந்து கார் வந்து என்னை படப்பிடிப்புக்காக அழைத்துச் செல்லும். மாலையில் என்னை மீண்டும் ஹாஸ்டலுக்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். நான் நடித்த முதல் படம் வெளியானதும் என்னை கதாநாயகியாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் மற்றும் படத் தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார்கள்.
நான் நன்றி மறக்காமல் முதல் படத்தில் என்னை அறிமுகம் செய்து வைத்த அந்த இயக்குநரையும் படத் தயாரிப்பாளரையும் கலந்தாலோசித்த சமயம் என்னுடைய கால்ஷீட் மற்றும் இதர பணிகளை எனக்கே தெரியாமல் உங்களது மேலாளர் கவனிக்கின்றார் என தெரிந்து கொண்டேன்.
அவரிடம் ஆலோசனை கேட்ட போது இனி வரும் அடுத்தடுத்த படங்களில் உங்களுடன் மட்டும் சேர்ந்து நடிக்க நிறைய படங்கள் இருக்கின்றன என்றும் அதற்கான ஒப்பந்தங்களில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எனக்கே தெரியாமல் எனக்கு நல்லது செய்ய வேண்டும் என்று உங்கள் அறிவுறுத்தலின் படி முன் வந்த அந்த மேலாளர் சொன்னபடி அனைத்து ஒப்பந்தங்களிலும் நான் கையெழுத்து போட்டு உங்களுடன் மட்டுமே தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்து முடித்தேன்.
இதனிடையில் நீங்கள் ஒரு நாள் என்னிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட சமயம் நான் ஒன்றும் சொல்லவில்லை. காரணம் எனக்கு என் தந்தை இறந்த அடைப்பு நேரமும் அதன் காரணமாக என் தாய் முப்பது நாட்களில் இறந்த காரணத்தாலும் அடைப்பு காலம் முடிவடையாத நிலையில் நானும் எப்போது வேண்டுமானாலும் அகால மரணமடைந்து விடலாம் என்றும் எண்ணினேன். அவ்வாறு நான் மரணம் அடைந்து விட்டால் நீங்கள் கஷ்டப்படக் கூடாது என்னும் எண்ணம் தான்.
ஆனால் நான் பதில் சொல்லாததை மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாம் என்று என்னுடன் பணியாற்றியவர்கள் உங்களிடம் தெரிவித்ததாக நான் அறிந்து கொண்டேன்.
இதற்கிடையில் என்னிடம் பல படங்களில் நடித்த காரணத்தால் என் தாய் தந்தையின் உறவினர்களிடம் இருந்த பணத்தை விட அதிக அளவு பணம் சேர்ந்து விட்டது. நான் புகழின் உச்சிக்கே சென்று விட்டேன். எனவே என்னிடமிருந்த பணத்துக்காகவும் எனது புகழுக்காகவும் என்னை திருமணம் செய்து கொள்ள என்னுடை தாய் தந்தையின் உறவினர்கள் முயற்சி எடுத்தனர். உறவினர்களில் நான் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் என்னுடைய எதிர்காலம் எதிர் நீச்சல் போடக் கூடிய அளவில் சண்டைகளுடன் தான் இருக்கும் என்பது எனக்குத் தெரிய வந்தது.
இந்த நிலையில் தான் நான் அடுத்த முறை நீங்கள் என்னிடம் திருமணம் பற்றி கேட்ட சமயம் உங்களிடம் மறுப்பு எதுவும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்தேன். நான் உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்த பின்னர் ஒரு வார காலத்தில் நல்ல நாள் பார்த்து என்னை உங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்து சென்றீர்கள்.
அவ்வாறு நான் வந்திருந்த சமயம் இயக்குநரும் தயாரிப்பாளரும் அடுத்த படப்பிடிப்பு காட்சி பற்றி கேட்ட போது திரைப்படத்தில் வரும் திருமணக் காட்சியினை திருமண மண்டபத்தில் இல்லாமல் மிகப் பெரிய மைதானத்தில் நடத்த வேண்டும். அனைத்து ரசிகர்களும் பங்கு கொள்ள வேண்டும என்பதனைக் கேட்ட போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதனை விட மிகப் பெரிய சந்தோஷம் படப்பிடிப்பு திருமணத்தினை வளர்பிறையில் நல்ல முகூர்த்த நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து கொடுக்க திரைப்படத்திற்கு பூஜை போடும் புரோகிதரை வரவழைத்தது தான்.
இதன் மூலம் ஜோதிடத்தின் மீதும் ஜாதகத்தின் மீதும் நம்பிக்கை உள்ள உங்களுக்கு வாழ்க்கைப் பட்டால் எந்த நேரத்திலும் எந்த நிலைமையிலும் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதனை நான் அறிந்து கொண்டேன்.
திருமணம் நடப்பது போன்ற படப்பிடிப்பின் போது அங்கு குழுமியிருந்த உங்கள் ரசிகர்களையும் என்னுடைய ரசிகர்களையும் பார்க்கும் போது என்னுடைய பெற்றோர் இல்லையே என்னும் ஏக்கம் இருந்தது. ஆனால் என்னுடைய பெற்றோர் இருந்திருந்தால் நான் மேற்கொண்டு படித்து முதுநிலைப் பட்டம் தான் பெற்றிருப்பேன். இவ்வளவு ரசிகர்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதனை உணர்ந்தேன்.
திருமண நாளன்று நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து பலர் வந்து இருந்தார்கள் என்னுடன் படித்த என்னுடைய நண்பர்கள் பல பேர் வந்திருந்தார்கள். என்னுடைய முறைமாமன் மகனும் என்னுடைய அத்தை மகனும் கூட வந்து இருந்தார்கள். அவர்களுடன் நான் திருமணம் செய்திருந்தால் இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் மேள தாளங்களுடன் வாண வேடிக்கை பட்டாசு சத்தங்களுடன் ஒரு கல்யாண மண்டபம் மாத்திரம் நிறைந்திருக்கும். ஆனால் லட்சக் கணக்கானோர் கூடியிருக்கும் மைதானத்தில் நான் மணமகளாக வந்து இறங்கும் சமயம் கிடைத்த லட்சக் கணக்கான ரசிகர்களின் ஆரவார வரவேற்பினை கண்டு களித்திருக்க முடியாது.
உங்களைத் திருமணம் செய்து கொண்ட சமயம் ஒரு மிகப் பெரிய மைதானமே திரண்டிருந்து ஊரே விழாக் கோலம் பூண்டு லட்சக் கணக்கானோர் முன்னிலையில் நான் உங்கள் கரங்களால் மோதிரம் மாற்றி கையெழுத்து போட்டு தாலி கட்டிக் கொண்டதை எண்ணும் போது புல்லரிக்கின்றது.
எல்லோரும் பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள் என்று மணமகள் வீட்டாரிடம் கேட்பார்கள். ஆனால் நம் திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் பலர் எனக்கு தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு சீதனம் செய்வது போல எண்ணிக் கொண்டு தங்க நகைகளை பரிசுப் பொருட்களாக கொண்டு வந்து திருமண மேடையிலேயே அணிவித்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷமாக இருந்தது. அதனை மிகப் ;பெரிய பாக்கியமாக நான் கருதினேன்.
உங்களை நான் கணவனாக அடைவதற்கு இதற்கு முன்னர் ஏழு பிறவிகளில் ஏதேனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பிறவியில் தவம் இருந்திருக்க வேண்டும். அந்த தவம் மற்றும் புண்ணியத்தின் பலனாகத் தான் நான் உங்களை திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ளேன் என்று காலடியில் விழுந்து வணங்கிய சமயம் கதாநாயகனான கணவன் இரண்டு தோள்களிலும் கைகளை வைத்து தூக்கி அரவணைத்துக் கொண்டார்.
வழக்கம் போல் மீண்டும் இருவரும் ஒரே படுக்கையில் அருகருகே உறங்கலாயினர். இரண்டாம் நாளன்றும் முதலிரவு நடக்கவில்லை.
No comments:
Post a Comment